பன்னிரு கருட சேவை உற்சவம்: ஸ்ரீமு‌‌ஷ்ணத்தில் பெருமாள் சாமிகள் வீதிஉலா

ஸ்ரீமு‌‌ஷ்ணத்தில் ஸ்ரீநம்மாழ்வார் கைங்கர்ய சபா சார்பில் பன்னிரு கருட சேவை உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில், விருத்தாசலம் நகரம், பூவனூர், வண்ணாங்குடிகாடு, எரப்பாவூர், வலசக்காடு, வட்டத்தூர், காவனூர், ஜமீன் காட்டாத்தூர் ஆகிய 8 ஊர்களில் இருந்தும் வரதராஜபெருமாள், மேமாத்தூர், கோமங்கலம், கோபாலபுரம், ஆண்டிமடம், அணிக்குதிச்சான், எசனூர் ஆகிய 6 ஊர்களில் இருந்தும் லட்சுமி நாராயண பெருமாள், ரெட்டிகுப்பம், கோ.பவழங்குடி, சொர்க்கப்பள்ளம், நந்தீஸ்வரமங்கலம் ஆகிய ஊர்களில் இருந்து சீனிவாச பெருமாள், திருப்பயர் பட்டாபிராம பெருமாள், க.இளமங்கலம் ராதாகிரு‌‌ஷ்ணன பெருமாள், கோமங்கலம் பிரசன்ன வெங்கடேச பெருமாள், தேவஸ்தான கோபுராபுரம் ஆதிநாராயண பெருமாள், ஸ்ரீ நெடுஞ்சேரி வேணுகோபாலப்பெருமாள், மன்னம்பாடி வேணுகோபால் பெருமாள், விருத்தாசலம் பெரியார் நகர் ராஜகோபாலசுவாமி ஆகிய பெருமாள் சாமிகளின் உற்சவர்கள் கருட வாகனத்தில் ஸ்ரீமு‌‌ஷ்ணம் கடைவீதி காமராஜர் சிலை அருகில் உள்ள பஜனை மடத்தில் எழுந்தருளினர். அங்கு சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து திருச்சித்ரகூடம் கோவிந்தராஜ பெருமாள் கோவில் அறங்காவலர் ரங்காச்சாரியார் பன்னிரு கருட சேவையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பெருமாள் சாமிகளும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.